Thursday, January 27, 2011

புத்தகக் கண்காட்சி 2011

எல்லா வருடமும்  ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி ரொம்ப பிரபலம். கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு முறை தவறாமல் போய் வருகிறேன். போவது மட்டும் இல்லாமல் நிறைய புத்தகங்களை வாங்கி வருவது என் வழக்கம்.இதற்காகவே ஒவ்வொரு வருடமும் குறைந்தது 1000 ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவேன்.

எல்லா வருடமும் சனி அல்லது ஞாயறு கிழமைகளில் செல்வேன். ஆனால் அப்போது தான் கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஸ்டாலிலும் புத்தகங்களை பொறுமையாக பார்க்க முடியாது. அதனால் இந்த முறை வெள்ளிக்கிழமை சென்றேன்.
 நான் எதிர் பார்த்த மாதிரி கூட்டம் இல்லை. ஒவ்வொரு ஸ்டாலிலும் பொறுமையாக புத்தகங்களை பார்வையிட முடிந்தது. இந்த முறை கிழக்கு, உயிர்மை பதிப்பகங்களில் இருந்து சில புத்தகங்களையும், வைரமுத்து கவிதை புத்தகமும்  வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்.

நான் சென்ற முதல் நாள் வைரமுத்து தான் சிறப்பு விருந்தினர். வைரமுத்துவின் வைர வரிகளுக்கு நான் என்றுமே அடிமை. காதலைப் பற்றி சினிமா பாடல்களில் வைரமுத்துவை விட சிறப்பாக சொன்னது என் பார்வையில் வேறு எவரும் இலர். அவரை நேரில் பார்க்க முடிந்தது. அவர் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஞானி, சாரு இவர்களையும் பார்க்க முடிந்தது.

இந்த முறை நாவல்கள்,சிறுகதை தொகுப்பு எதுவும் வாங்க கூடாதென்று முடிவெடுத்திருந்தேன். சில வாழ்க்கை வரலாறு புத்தகங்களும், கவிதை தொகுப்புகளும், சில கட்டுரை புத்தகங்களும் வாங்கலாம் என்று நினைத்தேன். சென்ற முறை வாங்கிய சில புத்தகங்களை இன்றும் திறந்து கூட பார்க்க வில்லை. அதனாலேயே இந்த முறை குறிப்பிட புத்தகங்களை மட்டும் வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த முறை வாங்கிய புத்தகங்களின் விவரம்
 ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கை - கிழக்கு பதிப்பகம்
ஸ்ரீ ரங்கம் டு சிவாஜி (சுஜாதாவின் வாழ்க்கை) - குமுதம் பதிப்பகம்
சிறிது வெளிச்சம் (எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்)  - விகடன் பதிப்பகம்
தேசாந்திரி (எஸ். ராமகிருஷ்ணன் பயணக் கட்டுரைகள்) - விகடன் பதிப்பகம்
உலக சினிமா (பாகம் 1 ) -  விகடன் பதிப்பகம்

சிறிது வெளிச்சம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். இது ஏற்கனவே ஆனந்த விகடனில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விசயங்களை மிகச் சிறந்த முறையில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார். நிறைய சின்ன சின்ன விசயங்களை வாழ்விற்கு தேவையான விசயங்களை  நாம் மறந்து விடுகிறோம். அவற்றை பற்றி அவருக்கே உரித்தான எளிய நடையில், சில உலக சினிமாக்களின் கதைகளோடு ஒப்பிட்டு கொடுத்துள்ளார்.

சீக்கிரமே இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டு மற்ற புத்தகங்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.



.

3 comments:

ஜெ.ஜெ said...

சீக்கிரமே இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டு மற்ற புத்தகங்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.////

கண்டிப்பா சீக்கிரமா படிச்சு முடிச்சிருவ :P

எவனோ ஒருவன் said...

அபி, ஒன்னு கூட என்னோட டேஸ்ட்டுக்கு இல்லையே. ஓ சி வாங்கி படிக்க முடியாது :-(

தபு சங்கரோட புது புக்ஸ் பார்த்தா சொல்லு. அடுத்த டைம் சென்னை வரும் போது வாங்கணும் :-)

இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2), ஆசிரியர் - பாலகுமாரன் இந்த புத்தகம் கிடைச்சா கண்டிப்பா வாங்கி வைடா. ரொம்ப நல்லா இருக்கும்னு கீழ இருக்கிற பதிவுல படிச்சேன்....

http://vigneshwari.blogspot.com/2010/12/blog-post.html

அபிராம் said...

@ ஆனந்த்...
உன்னோட டேஸ்ட்டுக்கு நிறைய நல்ல(காதல்) புத்தகங்கள பாத்தேன்...ஆனா ஏற்கனவே வாங்கின சில புத்தகங்கள இன்னும் திறந்து கூட பாக்கல... அதான் எதையும் வாங்க முடியல...

நானும் இனிது இனிது காதல் இனிது புத்தகத்த பத்தி கேள்விபற்றுக்கேன்...கண்டிப்பா வாங்கி வைக்கறேன்...